Monday 1 December 2014

பெண்ணென்று பிறந்துவிட்டால். . .


கவிதாயினி ஔவை நிர்மலா

செல்பேசி அலாரந்தான்
அடித்ததுவோ? அடிக்கலையோ?
தூக்கத்தில் ஆழ்ந்ததனால்
காதினிலே கேட்கலையோ?
என்றெல்லாம் தூக்கத்தில்
உளறுகின்ற உள்மனசில்
கலங்கலான கனவுகளில்
விட்டுவிட்டு ஒலிகேட்கும்!

அலாரமது அடிப்பதற்கு
அரைமணிதான் இருக்கையிலே
அச்சத்தால் எழுந்ததனால்
அரைத்தூக்கக் கலக்கத்தில்
பல்துலக்கிப் பால்காய்ச்சி
முன்னிரவே நறுக்கிவைத்த
கறிகாயைச் சமைத்துவைத்து
குழந்தைகளை எழுப்பிவிட்டு
குளியலெல்லாம் முடிக்கவைத்து
கட்டளைகள் பிறப்பித்து
அவர்செய்யும் செயல்களிலே
அயராமல் கண்வைத்து
சிற்றுண்டி ஊட்டிவிட்டு
மதியசோறும் கட்டிவிட்டு
பாடநூல சரிபார்த்து
பள்ளிவேனில் ஏற்றிவிட்டு
வீட்டுக்குள் வந்துபார்த்தால்
இடிச்சபுளி போலிருப்பார்
இல்வாழ்க்கைத் துணைவருந்தான்!

கடிகார முள்விரட்டக்
குளித்திடப் போகையிலே
அவர்குளிக்க வந்திடுவார்
இதுவரையில் என்னசெய்தீர்
எனும்கூச்சல் வலுத்திடுமே!
துண்டெங்கே சோப்பெங்கே
அதெங்கே இதெங்கேன்னு
ஆளாகப் பறக்கையிலே
அத்தனையும் தேடியோடி
அலுத்துவிடும் எரிச்சல்வரும்!


சிற்றுண்டிப் பரிமாறி
கேரியரில் சோறுகட்டி
அடுக்களையில் சாமான்கள்
அப்படியே போட்டுவிட்டு
அவசரமாய் உடைமாற்றி
கண்ணாடி எடுத்தோமா
சில்லறைகள் எடுத்தோமா
என்றேதான் ஒவ்வொன்றாய்
ஆராய்ந்து சரிபார்த்து
அறைக்கதவைச் சாத்திவிட்டு
வெளிக்கதவைப் பூட்டிவிட்டு
விரைகின்ற நேரத்தில்
சார்ஜ்போட்ட அலைபேசி
விட்டுவந்த நினைவுவர
மறுபடியும் தாழ்திறந்து
அதைஎடுத்து வந்ததிலே
பலநிமிடம் பாழாகி
அவசரத்தை மிகுவிக்கும்!

பேருந்து ஏற்றிவிடக்
கூடவரும் கணவனிடம்
வேண்டுகின்ற காய்கறிகள்
கட்டுகின்ற பில்களெல்லாம்
ஓயாமல் ஒப்புவித்தால்
வாய்மூடென்று அதட்டல்வரும்!

நிறுத்தத்தில் நிற்கின்ற
இடைநேரப் பொழுதினிலே
ஹீட்டரைத்தான் அணைத்தோமா?
கேஸைத்தான் அணைத்தோமா?
அயர்ன்பாக்ஸின் சுவிட்சைத்தான்
அணைக்கத்தான் மறந்தோமா?
நீரேற்றப் போட்டமோட்டார்
நிறுத்தாமல் வந்தோமா?
அறையினிலே மின்விசிறி
அணைத்தோமா? மறந்தோமா?
பால்மூடி வைத்தோமா?
மாவெடுத்து வைத்தோமா?
மீந்துபோன சட்டினியை
பிரிட்ஜினிலே வைத்தோமா?
மாடியைத்தான் திறந்தோமே
மறுபடியும் அடைத்தோமா?
டம்ளரிலே வெச்சகாப்பி
முழுதாகக் குடித்தோமா?
பூட்டுபூட்டி வந்தோமே
இழுத்துஅதைப் பார்த்தோமா?
என்றேதான் ஐயங்கள்
ஒவ்வொன்றாய் எழுந்துவரும்
விடைதெரியா பொழுதுமனம்
வீணாக எரிச்சலுறும்!
பேருந்துப் பயணத்தில்
பெண்கள்படும் தொல்லைகளை
எடுத்துரைத்தல் எளிதல்ல
எழுதிவிட முடிவதல்ல!

பேருந்து நிறுத்தத்தில்
கால்கடுக்கக் காத்திருந்தால்
வருகின்ற வாகனங்கள்
நிற்காமல் கடந்துசெலும்!
அப்படியே நின்றாலும்
குறிப்பிட்ட இடத்தினிலே
முறையாக நிற்காமல்
முன்பின்னாய் நின்றிடுமே!

ஒருபுறமாய்ச் சாய்ந்துவரும்
பேருந்தைப் பார்த்தாலே
ஏறுவது எப்படியோ
என்றுமனம் பேதலிக்கும்!
எட்டிஉள்ளே பார்த்தாலே
மூன்றுவண்டி ஜனமிருக்கும்
படிக்கட்டில் கால்வைக்க
நடத்துநரின் விசில்கேட்கும்!

பின்னாலே ஏறுபவர்
இடித்திடித்து முன்தள்ள
இஞ்ச்சிஞ்ச்சாய் முன்னேறி
நடுவினிலே சிக்கிடுவோம்!
அடுத்தடுத்து நிற்பவர்கள்
நம்காலை மிதித்திடுவார்
கால்வைக்க இடமின்றி
ஒற்றைக்கால் கொக்காவோம்!

கைகளால் பிடித்திடவோ
கம்பிகளோ எட்டாது
பிடிமானம் கிடைக்காமல்
தடுமாற வேண்டிவரும்!
இருக்கைமேல் பிடித்தாலோ
அமர்ந்திருப்பார் முறைத்திடுவார்
கைப்பையும் இடிக்குதென்று
கடுகடுப்பாய் முகம்சுளிப்பார்!

ஒருவரங்கே விடும்மூச்சை
இன்னொருவர் சுவாசிக்க
வியர்வையெனும் மழைபெய்து
உடலெங்கும் ஊற்றெடுக்கும்!

இருக்கையிலே அமர்ந்திருப்பார்
எப்போது எழுந்திருப்பார்
என்றேதான் மனதுக்குள்
மணிக்குருவி குரல்கொடுக்கும்!

எழுந்திடுவார் என்றேதான்
எதிர்பார்த்துக் காத்திருந்தால்
எங்கிருந்தோ வரும்ஒருவர்
தள்ளிவிட்டு அமர்ந்திடுவார்!
மூட்டைகளின் அடுக்குப்போல்
முட்டித்தான் கிடக்கையிலே
சீட்டுத்தர நடத்துநரோ
இடைஇடுக்கில் நுழைந்திடுவார்!

நெரிசலினைப் பயன்படுத்தும்
சபலபுத்திப் பேர்வழிகள்
அஞ்சுகின்ற பெண்தேடி
ஆங்காங்கே உரசிடுவார்!
தெருவினது திருப்பங்கள்
திடுமென்ற நிறுத்தல்கள்
எதிர்பார்த்துக் காத்திருந்து
வேண்டுமென்று மேல்விழுவார் !

இடிக்காமல் நில்லுமென்று
கடுப்பாகிச் சொல்லிவிட்டால்
காரிலேறிப் போங்களென்று
துடுக்காக மடக்கிடுவார்
சிக்னலிலே வண்டியுந்தான்
சிறைப்பட்டு நிற்கையிலே
நெடுநேர மாச்சுதென்று
நெஞ்செல்லாம் நடுநடுங்கும்!

தாமதந்தான் ஆகிவிட்டால்
தலைமையிலே இருப்பவர்கள்
தலைவாசல் நின்றுகொண்டு
வள்ளென்று விழுந்திடுவார்
வசைபாடி மகிழ்ந்திடுவார்
வகையாக மாட்டுபவர்
வாய்பேச முடியாமல்
கண்களிலே நீர்கோர்ப்பார்!

உணவுஇடை வேளையிலே
தம்முடைய துன்பத்தை
தோழியிடம் பரிமாறி
ஓயாமல் புலம்பிடுவார்
பிறர்துயரம் நோக்கையிலே
அக்கரைக்கு இக்கரைதான்
பச்சையென்ற உண்மைதனை
உணர்ந்துமனம் சலித்திடுவார்!

எட்டுமணி நேரந்தான்
அசராமல் வேலைசெய்து
எப்படித்தான் வீட்டுக்கு
போய்ச்சேர்வ தெனமலைப்பார்!

பேருந்து நிறுத்தத்தில்
பேரலையாய்க் கூடிநிற்கும்
கூட்டத்தைக் கண்டாலே
குளவிநெஞ்சில் கொட்டிடுமே
நாகரிகம் அத்தனையும்
மூட்டைகட்டி வைத்துவிட்டு
முண்டியடித் துள்ளேறத்
தயங்கிநொடி நின்றுவிட்டால்
இருட்டும்வரை அங்கேயே
இருந்திடத்தான் நேர்ந்திடுமே!

வீடுவந்து சேர்கையிலே
கைகால்கள் வெலவெலக்கும்
பசித்திருக்கும் குழந்தைகளோ
பாவமாக முகம்பார்க்கும்
காலையிலே செய்துவைத்த
உணவுகளைச் சுடவைத்து
சாப்பிடத்தான் எடுத்துவைத்தால்
சட்டென்று முகம்சுளிப்பர்
எப்போதும் இப்படியே
சாப்பிட்டுச் சாப்பிட்டு
வாழ்க்கைமிக சலித்ததென்று
கணவருந்தான் சிலிர்த்திடுவார்!

வகைவகையாய்ச் சமைத்திடவே
வீட்டினிலே இருந்திடவா?
வேலையை நாளைக்கே
விட்டுவிட்டு வந்திடவா?
என்றேதான் குரலெடுத்து
ஓங்கித்தான் ஒலித்துவிட்டால்
ஓர்நொடியும் நிற்காமல்
ஓடித்தான் ஒளிந்திடுவார்!

குழந்தைகளைத் தூங்கவைத்து
மிச்சமீதி ஆராய்ந்து
தோதான பாத்திரத்தில்
மீண்டுமதை எடுத்துவைத்து
பிரிட்ஜுக்குள் நிறைந்திருக்கும்
குவியலுக்குள் திணித்துவிட்டு
அடுத்தநாள் சமைப்பதற்கு
வெங்காயம் உரித்துவைத்து
பொரியலுக்குத் தேவைப்படும்
காய்கறிகள் நறுக்கிவைத்து
பத்துப்பாத் திரம்தேய்த்து
அடுக்களையைச் சுத்தமாக்கி
அடுத்தநாள் கட்டும்சேலை
ஜாக்கெட்டைத் தேடிவைத்து
அங்கங்கே கிடப்பதனை
அறைகுறையாய் ஒழுங்குசெய்து
கதவுகளைச் சாத்திவிட்டு
வெளிக்கதவைத் தாழிட்டு
விளக்குகளை அணைத்துவிட்டு
கட்டிலிலே படுக்கையிலே
உடல்முழுக்கத் துவண்டுவரும்
கண்களுக்குள் இருண்டுவரும்!

அடுத்தநாள் எழுந்திருக்க
அவகாசம் இல்லையென்று
கணவன்முகம் பாராமல்
கடிதாகக் கண்மூடி
போர்வைக்குள் சரண்புகுவோர்
போராட்டம் உரைப்பதற்குப்
பெண்களாலும் முடியாது
பைந்தமிழும் கைவிரிக்கும்!

(புதுவை அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதைநூலுக்குரிய பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் கூடிய கம்பன்புகழ் இலக்கிய விருது பெற்ற கவிஞர் ஔவை நிர்மலாவின் பெண்களின் கதை என்னும் கவிதை நூலிலிருந்து - (கவிஞர் ஔவை நிர்மலா, பெண்களின் கதை, காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2013, விலை ரூ80/-) பக். 27-36.

No comments:

Post a Comment